மே மாதத்தில் தென்மேற்கு பருவக்காற்று நிலவரத்துடன் களனி ஆற்றுப்படுகையில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதென எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனால், அதற்கு முன்னதாகவே தயாராக இருக்க வேண்டும் என கொழும்பு மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுக்கு கொழும்பு மாவட்ட செயலாளர் கே.ஜி.விஜேசிறி நேற்று அறிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு நேற்றுக் காலை கொழும்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றதுடன், மாவட்டச் செயலாளர் இதனைத் தெரிவித்தார்.
வெள்ளப்பெருக்கு அபாயம்
மேலும், அனர்த்த முகாமைத்துவ பிரிவுகள் அவசர நிலைமைகளுக்கு பதிலளிக்க தயாராக இருக்க வேண்டும் எனவும் மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி வளிமண்டலவியல் திணைக்களத்தில் விசேட கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளதாகவும், வெள்ளம் போன்ற அவசர நிலைமைகளை எதிர்கொள்ள ஆயுதப்படை மற்றும் அனர்த்த முகாமைத்துவ திணைக்களங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கொழும்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.
மேலும், வெள்ளம் ஏற்பட்டால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்குத் தேவையான படகுகள் இராணுவத் தளங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.
வெள்ளத்தினால் அச்சுறுத்தலுக்கு உள்ளான மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதில் உள்ளுராட்சி அதிகாரிகளுக்கு பெரும் பங்கு உள்ளதால், உள்ளுராட்சி அதிகாரிகளின் விசேட ஆணையாளர்கள் முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களை தயார்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் பிரதீப் உந்துகொட தெரிவித்தார்.