மட்டக்களப்பு மாவட்டம் – சவுக்கடி பகுதியில் கடலில் நீராடச் சென்ற இரு மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றுவிக்க இருந்த மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டிலிருந்து பிரத்தியேக வகுப்பு ஒன்றிற்கு சென்ற மாணவர்கள் இரண்டு பேரே இன்றைய தினம் (07-05-2023) காலை மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் கறுப்பங்கேணியை சேர்ந்த 16 வயதான டானியல் றோகித் மற்றும் இருதயபுரத்தினை சேர்ந்த 16 வயதான நிரோசன் பிரவீன் ஆகியோர் என உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாணவர்கள் நேற்றைய தினம் (06-05-2023) மாலை வீட்டிலிருந்து வந்து குறித்த கடற்பகுதியில் குளித்துக்கொண்டிருக்கும்போது அலையில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மரண விசாரணையை தொடர்ந்த சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
குறித்த மாணவர்களின் உயிரிழப்பு மட்டக்களப்பில் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



















