தனது மகளான 19 வயது யுவதியை, நீண்ட காலமாக பாலியல் வன்புணர்வு உட்படுத்தி வந்தார் என்றக் குற்றச்சாட்டில், கைதான யுவதியின் தந்தை நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம், மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மொக்கா தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தாயார் வெளிநாட்டில்
தன்னுடை தந்தை தன்னை தொடர்ச்சியாக அடித்து துன்புறுத்துவதாக அந்த யுவதி மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அதன்பின்னர் தந்தை கைது செய்யப்பட்டார்.
அந்த யுவதியான பாடசாலை மாணவி வைத்திய பரிசோதனைக்காக, டிக்கோயா- கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதே பல வருடங்களாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
யுவதியின் தாய், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் வெளிநாட்டுக்குப் பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார் என மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரை அடுத்த தவணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது, அறிக்கையை சமர்ப்பிப்பதாக மஸ்கெலியா பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.
மேலும் பாதிக்கப்பட்ட யுவதி, வைத்தியசாலை சிகிற்சையின் பின்னர் புனர்வாழ்வளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.