பொலன்னறுவையில் பாடசாலை மாணவிகளை ஆசிரியரொருவர் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
விஜயபாபுர பிரதேசத்தில் தனியார் ஆங்கில ஆசிரியர் ஒருவரால் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை காலமும் தமது மகள்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக 6 சிறுமிகளின் பெற்றோர் பொலன்னறுவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அச்சம் காரணமாக முறைப்பாடு செய்யாத பெற்றோர்
இந்த ஆசிரியர் அந்த பகுதியில் ஏராளமான சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகவும், ஆனால் சமூகத்தின் முன் பிள்ளைகள் அவமானப்படுத்தப்படுவார்கள் என்ற அச்சத்தில் பல பெற்றோர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்வதை தவிர்ப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பிள்ளைகள் 12 – 15 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
பெற்றோர்கள் செய்த முறைப்பாடுகளுக்கமைய, சந்தேகத்திற்குரிய 40 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான தனியார் ஆங்கில ஆசிரியர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.