நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய படையினர் அனைவரையும் அழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த விடயத்தை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று காலை (23.05.2023) நாடாளுமன்றில் வைத்து அறிவித்துள்ளார்.
நாற்பதாவது அதிகாரம் கொண்ட பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பொதுமக்களின் பாதுகாப்பினை கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
நாடாளுமன்ற அமர்வு இன்று முற்பகல் 09.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், முற்பகல் 09.30 மணி முதல் முற்பகல் 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, மு.ப. 10.30 முதல் பி.ப. 5.00 மணி வரை,
(i) பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு,
(ii) துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை,
(iii) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை,
(iv) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல்,
(v) புகையிலை வரி (திருத்தச்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்,
(vi) முத்திரைத் தீர்வைச் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை,
(vii) இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி மற்றும்
(viii) 2003 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் கட்டளை என்பன விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.
அதன் பின்னர், பிற்பகல் 5 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறும்.