சுவிட்சர்லாந்தில் பல்வேறு பகுதிகளில் அண்மைகாலமாக தமிழர்களை இலக்கு வைத்து நகைக் கொள்ளைகள் இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை வெளியாகி உள்ளது.
அடையார் என தமிழர்களால் அடையாளப்படுத்தப்படும் அல்கேரியர்கள் இந்த கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவதாக சுவிஸ் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
திடீரென வரும் கொள்ளையர்கள்
இந்த கொள்ளையர்களிடம் அதிகளவான தமிழர்கள் சிக்கிய நிலையில் தமது உயிரை பாதுகாக்க அவர்கள் பெருமளவு தங்கத்தை இழந்துள்ளனர்.
அந்த வகையில் சொலத்தூண் பிரதான புகையிரத நிலையத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஈழத்தமிழருக்கு அருகில் வந்த இருவர், அவர் அணிந்திருந்த காலணியை பார்க்குமாறு கூறியுள்ளனர்.
அதனை நம்பி அவர் குனிந்து காலலணியைப் பார்க்கும் நொடிப்பொழுதில் அவர் கழுத்தில் ஒருவர் கையால் இடிக்க மற்றவர் சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடியுள்ளனர். அதேபோன்று கெர்லபிங்கன் லிடெல் கடைக்கு 16 வயதான மகனோடு ஈழத்தை சேர்ந்த தாய் ஒருவர் சென்றுள்ளார்.
குறித்த தாய் கடைக்குள் வேறு பக்கம் பொருட்களைப்பார்த்துக் கொண்டு நிற்க மகனின் கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியைக் கண்ட ஒருவர் கைகளால் மகனை இடித்துவிட்டு அவர் நிலைதடுமாறும் நேரத்தில் சங்கிலியை அறுத்துள்ளனர்.
எனினும் சங்கிலியில் அம்மனின் டொலர் கிடந்ததால் அறுந்த சங்கிலி அந்த நூலில் சிக்கி கொள்ளையர்களுகு்கு கிட்டவில்லை.
உயிருக்கு உத்தரவாதம் இல்லை
அதேபோன்று, பாசல் நகரில் தங்க நகைகளை அணிந்து சென்ற இளைஞருக்கு அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது. வேறு மாநிலத்தில் இருந்து வந்த இருவர் வாகனத்தில் இருக்கும்போது கண்ணாடியைத்தட்டி ஒரு வெள்ளைக் காகிதத்தில் முகவரி கேட்டுள்ளனர்.
அந்த இடைவெளியில் மற்றுமொருவர் அவர் அணிந்திருந்த தங்க நகைகளை அறுத்தெடுக்க முயற்சித்த எடுத்த வேளையில் அவரது தங்கச்சங்கிலி மொத்தமாக இருந்ததால் கழுத்தும் அறுபட்டு பெரும் காயம் ஏற்பட்டுள்ளது.
அதேசமயம் சுவிஸ் நாட்டில் விசாவின்றி வீடொன்றில் தங்கியிருந்த ஆர்மேனியர்கள் பலரை பொலிஸார் கண்டுபிடித்து அனைவரையும் கூண்டோடு கைது செய்துள்ளனர் .
இவர்கள் களவு செய்வதில் கைதேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது. தமிழர்கள் எங்கெல்லாம் தங்கம் பணம் முதலியவற்றை மறைது வைப்பதை எளிதில் கண்டுபிடித்து ஒலியெழுப்பும் கருவிகளும் அவர்களிடம் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
எனவே இது தொடர்பில் தமிழ் மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.