யாழில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள், ஞாயிறு தினங்களில் வகுப்புகளை சில மணி நேரம் தாமதமாக தொடங்குவது குறித்து யாழ் மாவட்ட அரச அதிபருடன் கலந்துரையாடப்பட்டது.
யாழ். மாவட்ட அரச அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனை இன்று சந்தித்த கிருஸ்தவ பாதிரியார்கள் இது குறித்த கடிதம் ஒன்றையும் அரச அதிபரிடம் கையளித்தனர்.
அக் கடித்தத்தில் “ஞாயிறுகளில் தனியார் பிரத்தியேக வகுப்புகள் காலை 10.30க்கு பின் நடத்தப்பட வேண்டும்” எனும் கருத்தை தாங்கள் கடந்த கிழமை வெளியிட்டிருந்தமை மிகவும் ஆரோக்கியமானது.
தங்களுடைய நிலைப்பாட்டுக்கு எமது ஆதரவையும் உடனிருப்பையும் உறுதி செய்கிறோம். வெள்ளிக்கிழமைகளில் இந்து சமய மாணவர்களும் ஞாயிறுகளில் கிறிஸ்தவ மாணவர்களும் வழிபட தொடர்ந்தும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள எங்களுடைய ஒத்துழைப்பை உறுதி செய்கிறோம்.
சமய விழமியங்கள் மையமான வாழ்க்கை முறை மாணவர்களுக்கு அவசியம். அவர்களது உருவாக்கத்தில் நல்வாழ்வை உறுதி செய்ய சமய விழுமியங்கள் உரிய முறையில் அவர்களுடைய வாழ்வில் செயலாக்கமடைய வேண்டும்.
அப்போது தான் போதைவஸ்துக்கு அடிமையாதல், வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபாடு, ஒழுக்கயினம் போன்றவற்றை அகற்ற முடியும். ஆரோக்கியமான உறுதியான உடல்நிலை மற்றும் மனநிலை கொண்டவர்களை உருவாக்க கல்வியுடன் நல்ல மனப்பாங்கை உருவாக்க சமய விழுமிய மைய வாழ்க்கையை நாம் கூட்டாக முன்னெடுக்க வேண்டும்.
யாழ் கிறிஸ்தவ ஒன்றியமாக எமது தோழமையை வெளிப்படுத்துகிறோம். தேவையான சந்தர்ப்பங்களில் நீங்கள் எங்களை அழைக்கலாம் என்பதையும் தெரியப்படுத்துகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.