கொழும்பில் உள்ள பகுதியொன்றில் உள்ள வீடொன்றில் தனிமையில் இருந்த 73 வயதுடைய வயோதிப பெண்ணின் கை கால்களை கட்டிவிட்டு தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு மூன்று நபர் தப்பிச் சென்றுள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் கெஸ்பேவ, படுவந்தர பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலும் குறித்த சம்பவத்தில் சுமார் 13 இலட்சம் ரூபாவிற்கும் பெறுமதியான தங்க மோதிரங்கள், தங்க நெக்லஸ்கள், தங்க வளையல்கள் மற்றும் கைத்தொலைபேசியை திருடிக்கொண்டு சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கைகளில் கோப்பு அட்டைகள் மற்றும் ஆவணங்களுடன், நல்ல நேர்த்தியான உடை அணிந்த மூவரும் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற வீட்டின் முன்பகுதியில் அமைந்துள்ள இரண்டு வீடுகளில் டெங்கு பரவும் அபாயம் உள்ளதா என அவதானிப்பதைப் போன்று நடித்துள்ளனர்.
இதன் பின்னர் மூதாட்டி இருந்த வீட்டிற்கு அவர்கள் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏனைய இரண்டு வீடுகளிலும் இரண்டு அல்லது மூன்று பேர் இருந்ததை அவதானித்த கொள்ளையர்கள் இந்த வீட்டிற்கு வந்து வயோதிப பெண்ணிடம் ஒரு குவளை தண்ணீர் கேட்டதாகவும், அதனை கொடுப்பதற்காக சமையல் அறைக்குள் நுழைந்த போது இந்த சம்பவத்தை நடத்தியுள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் கெஸ்பேவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.