வடமாகாணத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துவருவது வருத்தமளிப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (25.08.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அச்சுறுத்தல் விடுக்கும் நிலை
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் சமீப காலமாக யாழ்ப்பாணத்தில் குறிப்பாக ஒரு சில வணிகர்கள் மத்தியில் போதைப் பொருள் கைப்பற்றப்படுவதும் போதைப்பொருள் பாவணையால் இளைஞர்கள் உயிரிழப்பதும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதும் அதிகரித்து வருகின்றன.
இப்பழக்கத்திற்கு அதிகமான இளைஞர்கள் தற்போது அடிமையாகி உள்ளனர். இவ்விடயத்தில் பெற்றோர்களும் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துகின்ற தரப்பினரும் கூடிய அக்கறை செலுத்த வேண்டும்.
சமூகவிரோத செயல்களில் ஈடுபடுகின்ற நபர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு நாம் வழங்கும் தகவல்கள் சில நிமிடங்களிலேயே சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தெரிய வருவதோடு அவர்கள் எம்மை தொடர்புகொண்டு அச்சுறுத்தல் விடுக்கும் நிலையும் தற்போது இடம்பெற்று வருகின்றது.
இது உண்மையில் சமூகவிரோத செயற்பாட்டில் ஈடுபடுபவர்களுக்கு ஏதுவானதான சந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுப்பதாக அமைந்துள்ளது” என்றவாறுத் தெரிவித்துள்ளார்.