யாழ். சங்கிலியன் வீதியில் அரச உத்தியோகத்தர்களின் வீட்டில் கத்தி முனையில் 20 பவுண் நகை திருட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இன்று (27.08.2023) அதிகாலை சங்கிலியன் வீதியில் உள்ள உடுவில் பிரதேச செயலக அரச உத்தியோகத்தரின் வீட்டில் 20 பவுண் நகையும் ஒரு தொகை பணமும் திருடப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்தில் இரவு வேளைகளில் வீடுகளுக்குள் இறங்கி வீட்டில் உள்ளவர்களை கத்திமுனையில் அச்சுறுத்தி நகை திருடும் மூன்று சம்பவங்கள் இவ் வாரம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாண பொலிஸார் விசாரணை
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு சம்பவங்கள் ஏற்கனவே பதிவாகியிருந்த நிலையில், இன்று (27.08.2023) அதிகாலை 2 மணியளவில் யாழ். பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கிலியன் வீதியில் கணவன், மனைவி இருவரும் உடுவில் பிரதேச செயலகம் நல்லூர் பிரதேச செயலகத்தில் பணிபுரியும் அரச உத்தியோகத்தர்களின் வீட்டின் பின் கதவினை உடைத்து உள்நுழைந்த முகத்தை மறைத்த மூவரடங்கிய கும்பல் வீட்டில் அறைக்குள் உறக்கத்தில் இருந்த மகனை எழுப்பி கையையும் காலையும் பிணைத்து கட்டிவைத்து தாக்கி கத்தி முனையில் அச்சுறுத்தி வீட்டிலிருந்த 20 பவுண் நகைகளை திருடி சென்றுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பொலிஸார் திருட்டு இடம்பெற்ற வீட்டிற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
திருட்டு சம்பவங்கள்
கடந்த புதன்கிழமையிலிருந்து திருட்டு சம்பவங்கள் இடம் பெற்று வரும் நிலையில் திருட்டு சம்பவங்கள் தொடர்பில், ஏற்கனவே யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இன்று வரை கைது செய்யப்படவில்லை.
குறித்த திருட்டு சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது என பொதுமக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.




















