இஸ்ரேல் காசாவை மீண்டும் ஆக்கிரமித்தால் அது மிகப்பெரும் தவறாக அமைந்துவிடும், என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கத் தொலைக்காட்சி சேனலான சி.பி.எஸ்.ஸிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்தச் சேனலில் ஒரு நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “இஸ்ரேல் மீண்டும் காசாவை ஆக்கிரமிப்பது தவறு,” என்று கூறினார்.
ஆனால், “தீவிரவாதிகளை” அகற்றுவது “மிகவும் அவசியமானது” என்று அவர் கூறினார். மேலும், ஹமாஸ் ‘முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டுமா’ என்று கேட்கப்பட்டக் கேள்விக்கு, ‘ஆம்’ என்று பைடன் பதிலளித்தார்.
மேலும் பேசிய அவர், “பாலத்தீனத்திற்கென ஒரு பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும், பாலத்தீன அரசு அமைவதற்கு ஒரு பாதை இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
‘காசாவை ஆக்கிரமிப்பது இஸ்ரேலின் விருப்பமல்ல’ “காசாவை ஆக்கிரமிப்பதற்கோ அல்லது காசாவில் தங்குவதற்கோ இஸ்ரேலுக்கு விருப்பம் இல்லை,” என்று ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதர் கிலாட் எர்டன் கூறியுள்ளார்.
பைடனின் பேட்டிக்குப் பிறகு எர்டன் இவ்வாறு கூறியுள்ளார். சி.என்.என் தொலைக்காட்சியில் தோன்றிய கிலாட் எர்டன், “எங்கள் வாழ்விற்காக நாங்கள் போராடுவதால் ஹமாஸை அழிப்பதுதான் ஒரே வழி. எனவே நாங்கள் தேவையானதைச் செய்ய வேண்டும்,” என்று கூறினார்.
இஸ்ரேல் ஹமாஸை அகற்றினால் காசா பகுதியை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு, “போருக்கு ஒரு நாள் கழித்து என்ன நடக்கும் என்பதைப் பற்றி இஸ்ரேல் இப்போது சிந்திக்கவில்லை,” என்று எர்டான் கூறினார்.
‘எல்லையைக் கடக்க விரும்புபவர்கள் ரஃபா அருகில் வரலாம்’ திங்கட்கிழமை காலை, இஸ்ரேலில் இருக்கும் அமெரிக்கத் தூதரகம், காசாவிலிருந்து எல்லையைக் கடந்து எகிப்துக்குச் செல்ல விரும்பும் மக்கள் ‘ரஃபா எல்லை கடக்கும் பகுதிக்கு அருகில் செல்லலாம்,’ என்று இஸ்ரேலில் ஒரு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
இன்னும் உறுதிப்படுத்தப்படாத ஊடக அறிக்கைகளை மேற்கோள் காட்டி, எகிப்து-காசா கடவை உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு திறக்கப்படும் என்று தூதரகம் கூறியிருக்கிறது. “பாதுகாப்பானது என்று நீங்கள் மதிப்பிட்டால், நீங்கள் ரஃபா கடவைக்கு அருகில் செல்லலாம்.
ரஃபா கடவை முன்னறிவிப்பு எதுவுமின்றி குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே திறக்கப்படும்,” என்று அந்த அறிவிப்பு கூறுகிறது. “ரஃபா கடவையின் நிலைமை கணிக்க முடியாததாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
மேலும் பயணிகள் கடக்கும் பாதையில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்களா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை,” என்று அந்த அறிக்கை மேலும் கூறியிருக்கிறது. ரஃபா எல்லை அமெரிக்கக் குடிமக்களுக்கு திறக்கப்படும் என்று கூறப்பட்டபின், சில பாலத்தீன அமெரிக்கர்கள் வார இறுதியில் ரஃபாவிற்கு பயணம் செய்தனர்.
அவர்களில் 600 பேர் வரை காஸாவில் இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. காசாவில் வேகமாகத் தீரும் அத்தியாவசியப் பொருட்கள் இந்நிலையில் காசா பகுதியில் உள்ள ஐ.நா.வின் மிகப்பெரிய உதவி அமைப்பு அழிவின் விளிம்பில் உள்ளது என்று அதன் தலைமை ஆணையர் தெரிவித்திருக்கிறார்.
காசாவை தளமாகக் கொண்ட ஐ.நா.வின் நிவாரண முகமையின் (UNRWA) ஊழியர்கள், எகிப்தின் எல்லைக்கு அருகிலுள்ள ரஃபாவிற்கு இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் தங்கி வேலை செய்யும் அதே கடிடத்தில் ‘தவிப்புக்குள்ளான ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்களும்’ இருக்கிறார்கள் என்று அக்குழுவின் ஆணையர் பிலிப் லாஸரினி கூறினார்.
கிழக்கு ஜெருசலேமில் உள்ள இந்த அமைப்பின் தலைமையகத்தில் இருந்து கடந்த (15.10.2023) அவர் ஆற்றிய காட்டமான ஒரு உரையில், “காசாவின் கழுத்து நெரிக்கப்பட்டு வருகிறது. இப்போது உலகம் அதன் மனிதநேயத்தை இழந்துவிட்டதாகத் தெரிகிறது,” என்று கூறியிருந்தார்.
“காசாவில் தண்ணீர் வேகமாகத் தீர்ந்து வருகிறது. விரைவில், அங்கு உணவு, மருந்து எதுவும் இருக்காது என்று நினைக்கிறேன்,” என்று லாசரினி கூறினார். காசாவில் நடந்த முற்றுகையை ‘கூட்டு தண்டனை’ என்று விவரித்தார். “மிகவும் தாமதமாகும் முன், முற்றுகை நீக்கப்பட வேண்டும்.
உதவி அமைப்புகள், எரிபொருள், தண்ணீர், உணவு மற்றும் மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை அங்கு பாதுகாப்பாகக் கொண்டு செல்ல அதுதான் முக்கியம்,” என்று அவர் மேலும் கூறினார்