மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் அரச காணியில் அத்துமீறிய குறியேறியவர்களை வெளியேறுமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி அன்வர் சதாத் கட்டளை பிறப்பித்துள்ள நிலையில் குறித்த கட்டளையை உரிய தரப்பினர்கள் நடைமுறைப்படுத்துவார்களா என பொத்துவில் பொலிக்கண்டி பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான அரச காணியில் அத்துமீறி குடியேறியதாக தெரிவித்து 13 பேருக்கு எதிராக ஏறாவூர் நீதிமன்றில் மகாவலி அதிகார சபையினால் கடந்த கடந்த 2023.09.22 அன்று தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு தீர்ப்புக்காக இன்று திங்கட்கிழமை எடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் அத்துமீறி குடியேறியதாக தெரிவிக்கப்பட்ட 13 பேரும் நீதிமன்றில் ஆஜராகி இருந்தனர். மகாவலி அதிகார சபை சார்பாக மன்றுக்கு அரச சட்டத்தரணி டில்கானி டி சில்வா ஆஜராகியிருந்தார்.
நீதவான் கட்டளை
இந்நிலையில் அதிகாரம் பெற்ற அதிகாரிகளின் எந்த வகையான ஆவணமும் நீதிமன்றுக்கு அத்துமீறி குடியேறியவர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டவர்களினால் சமர்ப்பிக்கப்படாததால் மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் அத்துமீறி குடியேறிய குறித்த 13 பேரையும் வெளியேறுமாறு நீதவான் கட்டளை பிறப்பித்தார்.
நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கின்ற நிலையில் ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் மயிலத்தமடு மாதவனை சட்டவிரோத குடியேற்றக்காரர்களை வெளியேறுமாறு தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்பு கிடப்பில் கிடக்கிறது.
இதனை இழுத்தடிப்பு செய்வதற்காக மகாவலி அதிகார சபையும் வனவளத் திணைக்களமும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்தார்கள். எனினும் திங்கட்கிழமை (2023.11. 13) ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி சட்டவிரோத குடியேற்றக்காரர்களை வெளியேற்றுமாறு கட்டளை பிறப்பித்துள்ள நிலையில் குறித்த கட்டளை உரிய முறையில் நிறைவேற்றப்படுமாஎன்ற சந்தேகம் எழுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.



















