தமிழகத்தில் நீலகிரி – குன்னூரில் சிக்கன் பப்சில் பல்லி இருந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து குறித்த பாஸ்ட் புட் கடைக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நீலகிரி மாவட்டம் குன்னூர் உபதலை கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். அரசுப்பேருந்து ஓட்டுநராக உள்ளார். இவர் நேற்று இரவு (21) பாய்ஸ் கம்பெனி பகுதியில் உள்ள பாஸ்ட் புட் கடையில், 4 சிக்கன் பப்ஸ் வாங்கிச் சென்றுள்ளார்.
கொத்தமல்லி என நினைத்தது பல்லி
வீட்டிற்கு சென்று தனது மனைவி, மகன் உட்பட 3 பேரும் இந்த பப்ஸ்களை சாப்பிட்டுள்ளனர். இதனையடுத்து நான்காவது பப்சை இவரின் மகன் எடுத்து பாதி சாப்பிட்டிருந்த போது கொத்தமல்லி என நினைத்து அதை தனியே எடுத்துள்ளார்.
அப்போது அது இறந்த நிலையில் இருந்த பல்லி என தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மூவரும் உடனடியாக குன்னூர் அரசு மருத்துமனைக்கு சென்று சிகிச்சை பெற்று இன்று காலை வீடு திரும்பினர்.
இது தொடர்பாக அவர்கள் அளித்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கடையில் ஆய்வு மேற்கொண்டு, கடைக்கு பூட்டுப் போட்டு சாவியை எடுத்துச் சென்றனர்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விசாரணைக்கு வருமாறு உத்தரவிட்டனர். சிக்கன் பப்சில் பல்லி கிடந்த சம்பவம் நீலகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. .