இன்று புதன்கிழமை (29) அதிகாலை ரயில் பாதுகாப்பற்ற கடவையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.
வஸ்கடுவ பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற கடவையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் இரண்டு வெளிநாட்டவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுற்றுலா பயணிகளுடன் சென்ற பேருந்து
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஒரு ஹோட்டலில் இருந்து பேருந்து ஒன்று அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு மற்றொரு ஹோட்டலுக்கு செல்லும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பஸ்ஸில் பயணித்த சுற்றுலாப் பயணிகள் செக் குடியரசிற்கு செல்வதற்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று இரவு 9 மணிக்கு விமானத்தில் ஏற வேண்டும்.
இந்நிலையிலேயே, அளுத்கமவில் இருந்து சிலாபம் நோக்கி பயணித்த ரயிலுடன் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் பஸ்ஸின் சாரதிக்கு கண்ணில் காயம் ஏற்பட்டதையடுத்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் காயமடைந்த சுற்றுலாப் பயணிகளுக்கு சுவா செரிய ஆம்புலன்ஸில் முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்தில் சிக்கிய ரயிலில் இருந்த பயணிகள், மருதானை நோக்கிச் செல்லும் மற்றொரு ரயிலில் சென்று தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை அடைந்ததாக கூறப்படுகின்றது