யாழ் – சாவகச்சேரி பகுதியிலுள்ள தேவாலயத்திற்கு ஞாயிறு ஆராதனைக்கு செல்லவில்லை எனப் பங்குத்தந்தை ஒருவரால் தாக்கப்பட்ட சிறுமி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் பங்குத் தந்தையே இவ்வாறு சிறுமியைத் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் தந்தை கத்தோலிக்கராக உள்ள போதும் தாயார் சைவ சமயத்தைச் சேர்ந்தவர் என்ற வகையில் சிறுமி தேவாலயத்திற்கு செல்வதில்லை.
தந்தையாருடன் சில சமயம் தேவாலயத்திற்கு சென்று வரும் பழக்கம் உடையவர் என்றபோதும் கடந்த சில நாட்களாக தேவாலயத்திற்கு செல்லாத சிறுமியை அழைத்து குறித்த பங்குத்தந்தை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி நேற்றைய தினம் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.