வவுனியா நகரை அண்டிய பாடசாலை ஒன்றின் உயர்தர மாணவர்களின் ஒன்று கூடலின் போது பாடசாலைக்கு முன்பாக வீதியில் நின்றவர்களுடன் பாடசாலை மாணவர்கள் கைகலப்பில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா நகரை அண்டிய பிரபல பாடசாலை ஒன்றின் உயர்தர மாணவர்களுக்கான ஒன்று கூடல் நேற்றைய தினம் (6) மதியம் இடம்பெற்றது.
சொகுசு கார்கள் மோட்டர் சைக்கிள்களில் மாணவர்கள் அட்டகாசம்
இதன்போது உயர்தர மாணவர்கள் சொகுசு கார்கள் மற்றும் அதியுயர் வேகம் கொண்ட மோட்டர் சைக்கிள்கள் என்பவற்றுடன் பாடசாலைக்கு வருகை தந்தனர். பாடசாலை முன்பாக அவற்றை செலுத்தி போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தினர்.
இதன்போது ஏனைய வகுப்பு மாணவர்களை ஏற்ற பாடசாலைக்கு வந்த பெற்றோர் ஒருவருடன் விபத்து ஏற்பட்டதையடுத்து, பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு அப்பகுதியில் இரு தரப்பும் கைகலப்பில் ஈடுபட்டனர்.
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து பொலிஸார் நிலமையை கட்டுப்படுத்தினர்.
சம்பவத்தின் போது, பாடசாலை வளாகத்தற்குள் இருந்து வருகை தந்து உயர்தர மாணவர்கள் பல தடவைகள் பெற்றோருடன் முரண்பட்ட போதும், பாடசாலை நிர்வாகம் மற்றும் கடமையில் இருந்த பதில் அதிபர், பழைய மாணவர் சங்கத்தினர் ஆகியோர் ஆக்கபூர்வமான நடவடிக்கைளை எடுக்கவில்லை என பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அதேவேளை கைகலப்பில் ஈடுபட்ட மாணவர்கள் சொகுசுகார்கள் மற்றும் மோட்டர் சைக்கிள்களில் பயணித்து வைவரவபுளியங்குளம் பகுதியிலும் பொது போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தி குழப்பம் விளைவித்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.