அடுத்த ஜனவரியில் சீனாவின் மற்றுமொரு ஆய்வுக் கப்பல் இலங்கைக்கு வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சீன அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் இதற்கான கோரிக்கை விடுத்துள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
‘சியாங் யாங் ஹாங் த்ரீ’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆய்வுக் கப்பல் ஜனவரி 5 ஆம் திகதி முதல் மே மாதம் வரை இந்தியப் பெருங்கடலில் ஆய்வுப் பணியில் ஈடுபடும் என்று குறித்த இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் இலங்கை மற்றும் மாலைதீவு துறைமுகங்களில் சீனக்கப்பல் நங்கூரமிடப்பட உள்ளதாகவும், அதற்காக இலங்கை அரசாங்கத்திடமும் மாலைதீவு அரசாங்கத்திடமும் சீன அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இது தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள இந்திய அரசாங்கம், குறித்த கப்பலுக்கு கடல் ஆய்வுக்கு அனுமதி வழங்குவது பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த கப்பலை வரவழைக்குமாறு சீன அரசாங்கத்திடம் சில மாதங்களுக்கு முன்னர் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும், அதனை வழங்குவது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.
சீன ஆய்வுக் கப்பலான ‘சியான் சிக்ஸ்’ கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கை வந்தடைந்ததுடன், இந்திய அரசாங்கமும் இது தொடர்பில் கவலை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.