விவசாயத் துறை வேலைவாய்ப்புகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட இலங்கையரின் முதலாவது குழு நேற்று முன்தினம் (18) இரவு இஸ்ரேலுக்கு பயணமானது.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்தக் குழுவில் முப்பது பேர் அடங்குவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இருபது பேர் கொண்ட மற்றுமொரு குழு நேற்றுக் காலை இஸ்ரேலுக்கு புறப்பட்டது.
முப்பது பேர் கொண்ட மற்றொரு குழுவை நேற்றிரவு இஸ்ரேலுக்கு அனுப்பவும் திட்டமிடப்பட்டிருந்தது.
சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் நடைபெற்ற வைபவத்தில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார முதல் தொகுதி தொழிலாளர்களுக்கான விமான டிக்கெட்டுகளை கையளித்தார்.
இந்நிகழ்வில்,இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உடன்படிக்கையின் பிரகாரம், அடுத்த சில வாரங்களில் 10,000 பணியாளர்கள் இஸ்ரேலுக்கு செல்லவுள்ளதாக முடியுமென அமைச்சர் குறிப்பிட்டார்.
நிர்மாணத்துறையில் வேலை வாய்ப்புகளுக்காக இருபதாயிரம் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த இஸ்ரேலும் இணங்கியுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.