மார்கழி மாதத்தில் வரும் பண்டிகைகளில் மிகவும் சிறப்பானது, வைகுண்ட ஏகாதசி. மார்கழி மாத வளர்பிறையில் வரும் இதற்கு முக்தி ஏகாதசி, முக்கோடி ஏகாதசி, பெரிய ஏகாதசி என்று பல பெயர்கள் உண்டு.
வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருக்க முடியாதவர்கள், வைகுண்ட ஏகாதசியிலாவது விரதம் இருந்தால் சிறப்பான பலனை அடையலாம்.
வைகுண்ட ஏகாதசி தினமான இன்றைய தினம் (23) பெருமாளின் 108 திவ்ய தேசங்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் எழுப்பிய கோவிந்தா முழக்கம் அந்த வைகுண்டத்தையே எட்டியது.
விண்ணை முட்டிய பக்தர்களின் கோவிந்தா முழக்கம் மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவார்கள்.
பரமபத வாசல்
இன்றைய தினம் தமிழகம் முழுவதும் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அனைத்து வைணவ ஸ்தலங்களிலும் பெருமாள் பரமபத வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
இராப்பத்து உற்சவத்தின் ஆரம்ப நாளான இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டபோது பக்தர்களின் கோவிந்தா… கோவிந்தா என முழக்கமிட்டனர்.
ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் எதிர்கொண்டு அழைக்க சொர்க்கவாசல் வழியாக பெரிய பெருமாள், இதை தொடர்ந்து ஸ்ரீஆண்டாள், ரங்கமன்னார் எழுந்தருளினர்.
இன்று திறக்கப்பட்ட இந்த பரமபத வாசல் வழியாக வருபவர்கள் வைகுண்டத்திற்கு சென்று வருவதாக ஐதீகம்.
திருவண்ணாமலையில் சிறப்பு அபிஷேகம்
பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும்,நினைத்தலே முக்தி தரும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவிலில் வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து அண்ணாமலையார் கோவில் கருவறையின் பின்புறம் உள்ள வேணுகோபால சுவாமி சன்னதியில் வேணுகோபால சுவாமி, பாமா, ருக்குமணிக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சன்னதியில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து அதிகாலை 5.40 மணியளவில் கோவிலின் அமைந்துள்ள வைகுந்த வாயில் திறக்கப்பட்டு சிறப்பு தீபஆராதனை நடைபெற்றது. வைகுந்த வாயில் வழியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நுழைந்து அண்ணாமலையார் மற்றும் வேணுகோபாலசாமிகளை தரிசனம் செய்தனர்.
அதேவேளை தமிழகத்திலேயே சிவ ஸ்தலங்களில் வைகுந்த வாயில் திறப்பது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.