முள்ளியவளையில் ஊற்று வெள்ளத்தால் வழுக்கி விழும் மக்கள் பல இன்னல்களுக்கு உள்ளாகின்றனர்.
ஊற்று வெள்ளத்தினால் வீதியை மூடி தண்ணீர் பாய்கின்றதால் வழியெங்கும் பாசி வளர்ந்துள்ளது.
கவனமெடுக்காத முள்ளியவளை பிரதேசசபையின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் அப்பகுதி மக்கள் பாதையை பயன்படுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்வதாக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.
காட்டாவிநாயகர் ஆலயத்திலிருந்து முள்ளியவளை சந்தை வரையான உள் வீதியொன்றே பாதிக்கப்பட்டுள்ளது.
வைகாசி வரை தொடரும்
ஒவ்வொரு வருடமும் இது போல் ஊற்று வெள்ளம் பாயும். ஆனாலும் இந்த வருடம் இதன் அளவு அதிகமாக இருக்கின்றது.
இம்முறை வீதியை மூடி ஊற்று வெள்ளம் பாய்வதால் வீதியால் பயணிக்கும் போது நீருக்குள்ளால் தான் பயணிக்க வேண்டி இருப்பதாக அந்த வீதியினை பயன்படுத்துவோர் தங்கள் ஆதங்கத்தினை வெளிப்படுத்தினார்கள்.
ஆறாம் கட்டைப் பகுதியில் உள்ள நீர் வற்றும் வரை இந்த வெள்ள ஊற்று ஓடிக்கொண்டே இருக்கும் என அவ்வீதியோரத்தில் குடியிருக்கும் மக்கள் பலர் குறிப்பிடுகின்றனர்.
ஆறாம் கட்டைப் பகுதி என்பது காட்டாவிநாயகர் ஆலயத்திற்கு தெற்குப் பகுதியில் உள்ள நிலப்பகுதி ஆகும்.
அங்குள்ள நிலம் ஈரலிப்பாகவும் நீர் கசிவுடையதாகவும் இருப்பதனை அவதானிக்க முடிகின்றது. அவ் நிலத்தில் வாழும் மக்கள் நிலத்தின் நீர்க்கசிவு சூழலை எதிர்கொண்டு வாழப் பழகியுள்ளார்கள் என்பதனை அவர்களுடன் உரையாடிய போதும் அவர்களது அன்றாட செயற்பாடுகளை இலகுவாக நிறைவேற்றிக் கொள்வதிலிருந்தும் அறிய முடிகின்றது.
ஆறாம் கட்டைப் பகுதியில் இருந்து ஊற்றெடுத்து வரும் வெள்ள நீரோட்டம் காட்டாவிநாயகர் ஆலயத்திற்கு முன்னாக உள்ள வடிகாலினூடாக பாய்ந்து கோவிலுக்கு வடக்கு பகுதிக்கு செல்கின்றது.
ஊற்று வெள்ளம் மேவிய பாதை கோவிலுக்கு வடக்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பாதை மேவிய வெள்ளத்தின் பாய்ச்சல் இந்த ஆண்டு வைகாசி மாதம் வரை தொடரும் என ஒருவர் குறிப்பிட்டமையும் நோக்கத்தக்கது.
தூர்ந்துபோன வடிகால்கள்
காட்டாவிநாயகர் ஆலயத்திற்கு வடக்கு பகுதியிலுள்ள நிலங்களிலும் நிலம் ஈரலிப்பாகவும் நீர்க்கசிவோடும் இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
குடியிருப்பு நிலங்களில் இருந்து ஊற்றெடுத்து வரும் வெள்ளம் வீதியில் உள்ள வடிகாலுக்கு சேரும் வகையில் வெட்டி விட்டுள்ளனர்.
வடிகாலினூடாக வடிந்தோடும் போது வடிகால்களின் கொள்ளளவு குறைவாகவும் சில இடங்களில் வடிகால் தூர்ந்துள்ளதாலும் வெள்ளம் வீதியின் மேல் பாய்ந்து கொண்டிருக்கின்றது என அவ்வூர் கல்வியாளர் ஒருவர் நிலைமையை விளக்கியிருந்தார்.
கொங்கிறீற்று பாதையை அமைக்கும் போது வீதியின் இரு பக்கங்களிலும் வடிகால்கள் இருப்பதனை உறுதி செய்திருக்க வேண்டும்.
ஆனாலும் அவர்கள் வீதியமைப்பில் எடுத்த அக்கறையளவுக்கு வடிகால்களின் அவசியத்தை கருத்திலெடுத்து செயற்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
வடிகால் போதியளவு கொள்ளளவை கொண்டிருந்தால் பாதை மேவிய ஊற்று வெள்ளம் இருந்திருக்காது.
இந்த பாதையில் சில இடங்களில் வடிகாலின் வழியே ஊற்று வெள்ளம் பாய்வதனையும் அவ்விடங்களில் பாதைமேவிய ஊற்று வெள்ளம் இல்லை என்பதையும் அவர் தனது கருத்துக்கு அரண் சேர்க்கும் வண்ணம் சுட்டிக் காட்டியமையும் நோக்கத்தக்கது.
மக்கள் எதிர்கொள்ளும் துயர்
பாதை கொங்கிறீற்று பாதையாக இருக்கின்றது. ஊற்று வெள்ள நீர் மூன்று சென்றி மீற்றருக்கும் கூடிய உயரத்திற்கு ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு பாய்ந்த வண்ணம் இருக்கின்றது.
நீண்ட நாட்களாக தொடர்ந்து பாய்வதால் பாதையில் உள்ள கொங்கிறீற்று பகுதியில் பாசி பிடித்துள்ளது.
நடந்து செல்லும் போதும் மோட்டார் சைக்கிளுடன் வருவோர் கால் ஊன்றி நிற்கும் போதும் சறுக்கி விழுந்த நிகழ்வுகள் நடந்தவாறு இருப்பதாக வீதியை சுத்தம் செய்துகொண்டு இருந்த முதுசமொருவர் குறிப்பிட்டார்.
சில தினங்களுக்கு முன்னரும் ஒருவர் மோட்டார் சைக்கிளை திருப்பும் போது சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளானதாக குறிப்பிட்டார். அந்த விபத்திற்குள்ளானவருக்கு கால் முறிந்து விட்டதாகவும் அந்த வயோதிப மாது குறிப்பிட்டார்.
வீதியோரத்தில் சேரும் குப்பைகளை தான் தினமும் அகற்றுவதாகவும் தண்ணீர் வைகாசி அளவில் தான் வற்றும்.
அது வரையும் தன் இந்த முயற்சி தொடரும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
சிறுவர்கள், வயதானவர்கள் என பலரும் இந்த வீதியை பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் அவர்களும் சறுக்கி விழுகின்றனர் என்பதும் அவருடனான உரையாடலின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.
இணைப்பு வீதிகளின் சிறு பாலங்கள் சேதம்
இந்த பாதை வழியே பயணித்து மாங்குளம் முல்லைத்தீவு வீதியில் பல இடங்களில் இணைந்து கொள்ளும் வண்ணம் பல இணைப்பு வீதிகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கொங்கிறீற்று பாதையில் இருந்து ஏனைய இணைப்பு வீதிகளுக்கு செல்லும் போது அவற்றை இணைக்கும் சிறு பாலங்கள் சேதமடைந்திருப்பதும் இங்கே சுட்டிக் காட்ட வேண்டிய ஒன்றாகும்.
வீதியில் உள்ள பாசியும் அதனை அகற்றலும்
கொங்கிறீற்று நிலங்களில் நீர் தேங்கிய இருந்தாலோ அன்றி நீண்ட காலத்திற்கு நீரோட்டம் இருந்தாலோ அதன் மீது பாசி எனப்படும் வழுக்கும் நிலையை ஏற்படுத்தும் படிவுகள் தோன்றுகின்றது.
காட்டாவிநாயகர் ஆலயத்தில் இருந்து முள்ளியவளை சந்தை வரை உள்ள வீதியொன்றில் முந்நூறு மீற்றர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள கொங்கிறீற்று பாதையில் பாசி வளர்ந்துள்ளது.
அதனை அகற்றுவதில் அவ்வீதியை பயன்படுத்தும் மக்கள் அதிக முயற்சிகளை செய்தவாறு இருக்கின்றனர்.
பிரதேச சபையினரும் இது தொடர்பில் கூடியளவு கவனம் எடுப்பதாகவும் மக்களில் சிலர் குறிப்பிட்டனர். வீதியின் நிலத்தினை மணலால் துண்டாடி குளோரீன் எனும் பாசி நீக்கியை பயன்படுத்தினால் கொங்கிறீற்று பாதையில் உள்ள பாசிகள் நீங்குவதோடு அதன் மீதுள்ள வழுக்கும் இயல்பும் நீங்கும் என அறிவியல் துறையில் ஈடுபாடுள்ள விஞ்ஞான பாட ஆசிரியர் ஒருவர் இது தொடர்பில் கருத்துக் கேட்ட போது குறிப்பிட்டார்.
குளோரீனை பயன்படுத்துமளவுக்கு நீரோட்டம் இருப்பதாகவும் பாதையில் முழு நீளத்திற்கும் இம்முறையில் தீர்வு காண முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த செயற்பாட்டை ஒருங்கிணைத்து செயற்படுத்த யார் முன்வருவார்கள் என அவர் கேள்வியெழுப்பியிருந்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.