இலங்கையில் சில மோசடி குழுக்கள் வீடுகளுக்கு தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தி தங்களை பொலிஸார் என கூறி பணம் கேட்டு மோசடியில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முல்லேரிய மற்றும் நவகமுவ பொலிஸ் நிலையங்களுக்கு இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இது திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படும் மோசடி என அவர் கூறியுள்ளார்.
மர்ம அழைப்பு
தாங்கள் குற்றச்செயலுக்கு தொடர்புப்பட்டுள்ளதாகவும், தாங்கள் கைது செய்யப்படவுள்ளதாகவும் கூறி அழைப்பேற்படுத்தும் நபர்கள் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் ஒரு போதும் கைது செய்யப்படும் நபர்கள் தொடர்பில் தொலைபேசியில் அழைப்பேற்படுத்தி கூறுவதில்லை.
இதனால் இவ்வாறான அழைப்புகள் கிடைத்தால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையததிற்கு சென்று முறைப்பாடு செய்யுமாறு பொது மக்களிடம் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ கேட்டுக்கொண்டுள்ளார்.