அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் உள்ள கிராம தலைவர்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சந்திக்கவுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தசபல சேனா வேலைத்திட்டத்தின் கீழ் அவர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார். மாநகர சபைகள், பிரதேச சபைகள் மற்றும் கிராம மட்டங்களின் தலைவர்கள் அனைவரும் இங்கு கூடுவார்கள் என நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
தேர்தல் தயார்படுத்தல்
கொழும்பு மாவட்டத்தை மையமாக வைத்து நேற்று மொரட்டுவையில் இருந்து இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் எந்தவொரு தேர்தலுக்கும் கட்சியை தயார்படுத்துவதும், அடிமட்டத்தில் கட்சியை பலப்படுத்துவதுமே இங்கு நோக்கமாகும் என நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
பொய்யான குற்றச்சாட்டுகள்
இதுதவிர பொதுஜன பெரமுன மீது சுமத்தப்பட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டுகள் மற்றும் உண்மை என்ன என்பது குறித்து கிராம தலைவர்களுக்கு விளக்கமளிக்க தயார் எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
மேலும், ஒரு கிராம சேவகர் பிரிவில் இருந்து 10 செயற்பாட்டாளர்கள் தெரிவு செய்யப்பட்டு கட்சியின் பொய்யான அறிக்கைகளுக்கு பதிலளிக்க தயார் எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.