இளையராஜாவின் அம்மா சின்னதாய், மனைவி ஜீவாவை தொடர்ந்து, மகளின் உடலும் அதே இடத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.
தமிழ் திரைப்பட உலகின் மிகப் பிரபலமான இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பிரபல பாடகியுமான பவதாரணி (47) உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தநிலையில் கடந்த 25 ஆம் திகதி இலங்கையில் உள்ள மருத்துவமனையில் காலமானார்.
தற்போது பவதாரிணியின் உடல் தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டு இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
கடந்த சில மாதங்களாக கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பவதாரிணிக்கு இலங்கையில் ஆயுர்வேத முறையில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
அவரது மறைவு ஒட்டுமொத்த திரையுலகத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரது உடல் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு பின்னர், சென்னை தி. நகரில் உள்ள இசைஞானி இளையராஜா இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு பவதாரிணியின் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திரையுலக பிரபலங்கள் உற்பட ஏராளமான பொதுடக்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
லோயர்கேம்பில் உள்ள பண்ணை வீட்டில் அடக்கம் செய்ய ஏற்பாடு
இதன் பின்னர் பவதாரிணியின் உடல் நேற்று இரவு அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இதற்காக பவதாரணியின் உடலை அடக்கம் செய்யும் இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் பண்ணை வீட்டில் பந்தல் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இளையராஜாவின் உறவினர்கள் அப்பகுதியில் குவிந்துள்ளனர்.
ஏற்கனவே இளையராஜாவின் தாய் சின்னத்தாய் மற்றும் மனைவி ஜீவா ஆகியோர் உயிரிழந்த போது அவர்களது உடலும் லோயர்கேம்பில் உள்ள பண்ணை வீட்டில் தான் அடக்கம் செய்யப்பட்டு, மணிமண்டபங்களும் கட்டப்பட்டுள்ளன.
தற்போது தாயார் ஜீவாவின் சமாதி அருகே பவதாரணி அடக்கம் செய்யப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.