யாழிலிருந்து திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த அரச பேருந்தில் எரிபொருள் இன்மையால் பேருந்து நடுவீதியில் நிறுத்தப்பட்டமையால் பயணிகள் அசௌகரியத்தை எதிர்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்று மாலை நான்கு பதினைந்து மணிக்கு புறப்பட்ட பேருந்து இரவு 8. 10 மணியளவில் ஹொரவ்பொத்தானை பிரதேசத்தில் உள்ள யான் ஓயா பகுதியில் எரிபொருள் இன்மையால் நின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் பேருந்தை செலுத்தும் முன்னரே முன்னாயத்தங்கள் செய்திருக்க வேண்டும் எனவும் பயணிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
பேருந்தில் வந்த பயணிகள் பல தடவைகள் சாரதி மற்றும் நடத்துனரிடம் டீசல் வாங்கி தருவதாக கூறி இருந்த போதும் முகாமையாளர் அனுமதி தராத பட்சத்தில் டீசல் ஊற்ற முடியாது என தெரிவித்த போது ஆத்திரமடைந்த பயணிகள் இரு பக்க வீதியையும் மறித்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.
இதனை அடுத்து சுமார் மூன்று மணித்தியாலத்தின் பின் திருகோணமலையிலிருந்து எரிபொருள் கொண்டுவரப்பட்டு பின் பேருந்து செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.