இலங்கையில் சிறு குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை சிறையில் தடுத்து வைக்காது வீட்டுக்காவலில் வைக்கும் நடைமுறை ஒன்றை அறிமுகம் செய்வதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகளில் நிலவி வரும் கடும் நெரிசல் நிலைமைகளினால் இந்த திட்டம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சிறு குற்ற செயல்களில் ஈடுபட்ட நபர்களை வீட்டு காவலில் தடுத்து வைக்கும் முறை காணப்படுகின்றது.
சட்ட வரைவு
இதேவிதமாக இலங்கையிலும் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை வீட்டு காவலில் தடுத்து வைத்து அவர்களுக்கு ஆலோசனை வழிகாட்டல்களை வழங்குவதற்கும் புணர்வாழ்வு அளிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
நீதி அமைச்சு இது தொடர்பிலான சட்ட வரைவுகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உத்தேச சட்ட வரைவு உருவாக்கப்பட்டதன் பின்னர் அது நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெற்றுக் கொள்ளப்படும் என நீதி அமைச்சு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன
கைதிகளை கண்காணிப்பதற்கு விசேட சிப்
இவ்வாறு வீட்டுக்காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விசேட சிப் அல்லது கைக்கடிகாரம் ஒன்றை அணிந்திருக்க வேண்டும் என்ற நடைமுறை அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர்கள் வீட்டை விட்டு நெடுந்தூரம் வெளியே உலவுகின்றனரா என்பது குறித்து கண்டறிந்து கொள்வதற்கு இந்த இலத்திரனியல் சாதனங்கள் உதவும் என தெரிவிக்கப்படுகிறது.
வீட்டை விட்டு நீண்ட தூரம் வெளியே சென்றால் அது குறித்து பொலிஸாருக்கு தகவல் கிடைக்க கூடிய வகையில் இந்த வீட்டுக்காவல் நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
நாட்டில் 30 சிறைச்சாலைகளில் 13000 கைதிகளை தடுத்து வைக்கக் கூடிய வசதியே காணப்படுவதாகவும், இதில் 33000 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.