கப்பல்களுக்கு மீண்டும் எரிபொருள் வழங்க ஆர்ம்பித்ததன் மூலம் மூன்று மில்லியன் டொலர் வருமானம் ஈட்டமுடிந்ததாக மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி. வீ. சானக தெரிவித்தார்.
கப்பல்களுக்கான எரிபொருள் நிரப்பும் செயல்பாடுகளை (bunkering system) மீள ஆரம்பித்ததன் மூலம் 5,200 மெற்றிக் டொன் எரிபொருளை விற்பனை செய்து 03 மில்லியன் டொலர்கள் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, வலுசக்தி தேவைகளுக்காக 200 மில்லியன் டொலர்கள் மேலதிக கையிருப்பு பேணப்படுவதாகும் இராஜாங்க அமைச்சர் டி. வீ. சானக தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,
நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு தற்போது படிப்படியாக மீண்டு வரும் சூழ்நிலையில் உள்ளது.
ஒரு காலத்தில் நாம் அனைவரும் எரிபொருள் வரிசையில் நின்றோம். அனைவரின் அர்ப்பணிப்புடன், நிலையான எரிபொருள் விநியோகத்தை பேண முடிந்துள்ளது.
சமீப காலமாக வரலாற்றில் தற்போது மிகப்பெரிய அளவிலான எரிபொருள் கையிருப்பு வைத்திருக்கிறோம். பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் டொலர்களின் சேமிப்பையும் எம்மால் பேண முடிந்துள்ளது எனவும் மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி. வீ. சானக தெரிவித்தார்.