இலங்கையில் 35 வருடங்களுக்கு முன்பு கொலை ஒன்றை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த பெண் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் கடந்த1989 ஆம் ஆண்டு வெல்லவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலும் குறித்த சம்பவத்தில் இலங்கை மின்சார சபை தர பரிசோதகர் ஒருவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட நபரின் மனைவி செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதன்படி, அத்துருகிரிய வெல்லவ பிரதேசத்தில் வசிக்கும் கணவன் மனைவியை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
அப்போது கைது செய்யப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க பெண் மின்சார சபையில் ஆங்கில தட்டச்சராக பணியாற்றி வந்ததும், கொலை செய்யப்பட்ட நபருடன் தவறான தொடர்பு வைத்திருந்ததும் தெரியவந்தது.
1989 ஆம் ஆண்டு ஒரு குறிப்பிட்ட நாளில், இது தொடர்பான உறவு தனது கணவருக்குத் தெரியவந்ததையடுத்து, அந்த பெண் தனது கள்ளக்காதலரை அத்துருகிரிய, வெல்லவயில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.
அங்கு கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலரை துண்டு துண்டுகளாக வெட்டி கொலை செய்து பீப்பாயிலிட்டு கிணற்றில் போட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, கணவன்-மனைவி இருவரும் 6 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இவ்வாறு விடுவிக்கப்பட்ட தம்பதியினர் பின்னர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, அவர்கள் இல்லாமல் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு, தம்பதியருக்கு 2019 இல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், கொலையைச் செய்த தம்பதியை எந்த பொலிஸாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில், கொலையைச் செய்த பெண், பண்டாரகம பமுனுகம பிரதேசத்தில் வாடகை வீட்டில் பதுங்கி இருப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் படுகொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்குத் தகவல் கிடைத்திருந்தது.