சாந்தன் என்கிற தில்லையம்பலம் சுதேந்திரராஜாவை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான அனுமதியை இந்திய மற்றும் இலங்கை அரசுகள் வழங்கியுள்ளன.
இதனால், தனது முதுமைக் காலத்தில் மகனுடன் இணைந்து வாழ வேண்டும் என்கின்ற சாந்தனின் தாயாரின் கனவும் நனவாகும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளன.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டு, 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த அவர் உள்ளிட்ட ஏழு பேரையும் இந்திய உச்சநீதிமன்றம் விடுவித்திருந்தது.
துணைத் தூதரகம் கோரிக்கை
இதே வழக்கில் தண்டிக்கப்பட்டிருந்த பேரறிவாளனை விடுதலை செய்த தீர்ப்பை மேற்கோள்காட்டி, நீதியரசர்கள் பி.ஆர் கவாய் மற்றும் பி.வி நாகரட்ணா ஆகியோர் சாந்தன் உட்பட அனைவரையும் விடுவித்து கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி தீர்ப்பளித்திருந்தனர்.
சாந்தன் இலங்கை திரும்பிச் செல்வதற்கான தற்காலிக பயண ஆவணத்தை சென்னையிலுள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயம் இந்த மாதத்தின் முற்பகுதியில் வழங்கியிருந்தது.
அதனைத் தொடர்ந்து, அவரது பயணத்திற்கான அந்த மூல ஆவணம், தமிழக அரசின் பொதுத்துறை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
மேலும், அவரை நாட்டிற்கு திருப்பியனுப்பும் நடவடிக்கையை விரைவாக முன்னெடுக்குமாறு துணைத் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.
மத்திய அரசுக்கு கோரிக்கை
“இந்த பயண ஆவணம் கிடைக்கப்பெற்றதென்பதை நீங்கள் தெரிவித்தால் நன்று, மேலும் அவரை விரைவாக நாடு கடத்துவதற்கான ஒழுங்குகளைச் செய்து, அது குறித்த விபரங்களை எமக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என சென்னையிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தின் உயரதிகாரி தமிழக அரசுக்கு எழுதியிருந்தார்.
தற்போது, திருச்சி சிறப்பு முகாமிலிருக்கும் சாந்தனை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான பயண ஆவணமானது இந்திய மத்திய அரசின் வெளிவிவகார அமைச்சின் வேண்டுகோளின் அடிப்படையில் வழங்கப்பட்டதாக தூதரக அதிகாரிகள் கூறுகின்றனர்.
முன்னதாக, வயதான தனது தாயாருடன் வசிக்க வழியேற்படுத்தும் வகையில் தன்னை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டுமென சாந்தன் இந்திய மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதேவேளை, அவரது தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரியும் இந்தியப் பிரதமர் நரேந்தி மோடிக்கு கண்ணீர் மல்க நேரடியாக ஒரு வேண்டுகோளை காணொளி மூலம் விடுத்திருந்தார்.
சாந்தனின் மனுக்கு உரிய பரிந்துரையுடன் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி மத்திய அரசுக்கு மாநில அரசால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
உடல்நிலையில் முன்னேற்றம்
இதனை தொடர்ந்து திருச்சி சிறப்பு முகாமிலிருந்த சாந்தனின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து, அவர் சென்னையிலுள்ள ராஜீவ் காந்தி அரச பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக மாற்றப்பட்டார்.
இந்நிலையில், அவருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதாக பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக வைத்தியசாலைத் தகவல்கள் கூறுகின்றன.
அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அவருக்கு மூச்சிழுப்பு இருந்ததோடு வயிற்றில் திரவம் நிரம்பி கால்கள் வீக்கமடைந்திருப்பதாகவும், அவருக்கு உறுப்பு மாற்று சத்திரசிகிச்சை தேவைப்படும் எனவும், அவரது உடல்நிலை ஸ்திரமடைந்த பின்னர் அதை செய்யலாம் எனவும் வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை, அவரது சட்டத்தரணி பாண்டியன் புகழேந்தி, அவரது உடல்நிலை சிறிது முன்னேறியுள்ளதாகவும் அவரால் பயணிக்க முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.