கலஹா லுல் கந்துர தோட்டத்திலுள்ள , லைன் அறையில் 5 1/2 மாத குழந்தையை வாடகை அறையில் விட்டுவிட்டு வெளிநாடு சென்ற இளம் தம்பதி தொடர்பில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் இருந்து தற்காலிக வதிவிடமாக தங்க வந்ததாகவும், அவர்கள் வரும் போது அங்கு வசித்து வந்த பெண் மனநோயால் பாதிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் ஒப்படைப்பு
இந்நிலையில் நேற்று முன் தினம் (22) அந்த லைன் அறையில் வசிக்கும் ஒருவரை தொடர்பு கொண்டு, தொலைபேசியில் தொடர்பு கொண்ட தம்பதிகள் , தாங்கள் வெளிநாடு செல்வதால் அறையில் விட்டு வந்த குழந்தையை பார்த்துக் கொள்ள யாரையாவது ஏற்பாடு செய்யுமாறு கூறியுள்ளனர்.
இது தொடர்பில் தோட்ட நிர்வாக அதிகாரிக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து , குடும்ப நலப் பணியாளர் தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது அறையில் குழந்தை அழுது கொண்டிருந்தது.
மீட்கப்பட்ட குழந்தை குடும்ப நலப் பணியாளரால் தெல்தோட்டை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
பொலிஸார் சந்தேகம்
தெல்தோட்டை வைத்தியசாலையில் தாய்ப்பால் ஊட்டும் வசதிகள் இல்லாத காரணத்தினால் , குழந்தையை பேராதனை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் மற்றும் கண்டி மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கலஹா தெல்தோட்டை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி கபில அத்தபத்து தெரிவித்தார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள கஹல பொலிஸார், தம்பதியினர் உண்மையில் வெளிநாடு சென்றனரா அல்லது வெளிநாடு செல்லும் போர்வையில் நாட்டில் எங்காவது மறைந்து இருக்கின்றார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.