இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கடந்த நாடாளுமன்ற அமர்வுகளில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நிர்வாக சபையின் அங்கீகாரத்துடன் தொழிற்சங்கங்களுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டின்படி, இந்த சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இது தொடர்பில் விளக்கமளிப்பதற்காக எழுத்துமூல அவகாசம் கோருமாறு நிர்வாக சபையினால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய நிதியமைச்சராக கடமையாற்றும் ஜனாதிபதிக்கு கடந்த 22ஆம் திகதி மத்திய வங்கி ஆளுநரால் கடிதம் ஒன்று அனுப்புப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த சந்தர்ப்பத்தின் பின்னர் உரிய நாடாளுமன்றக் குழுவின் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்க மத்திய வங்கி தயாராகவுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.