தற்போது ஐ
ரோப்பா உள்ளிட்ட சர்வதேச சந்தையில் நீல சங்கு பூக்கள் தொடர்பான பொருட்களுக்கு அதிக கேள்வி எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த பூவில் இருந்து தயாரிக்கப்படும் ப்ளூ டீ சர்வதேச சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
குறிப்பாக நீல சங்கு பூவின் பருவத்திற்கு ஏற்ப பிலிப்பைன்ஸ், தாய்வான் போன்ற நாடுகளும் இந்தப் பயிர்ச்செய்கையை மேற்கொண்டுள்ள நிலையில், நமது நாட்டில் உள்ள கரஸ்முல்ல ஒமரகம கிராமத்தில் சுமார் 60 பெண்கள் தற்போது நீல சங்கு பூ பயிர்செய்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்மூலம், தனியார் நிறுவனம் ஒன்று உலர் நீல சங்கு பூக்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பெரும் மாத வருமானத்தை பெருவதாக கைத்தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.
கைத்தொழில் அமைச்சு உதவி
இந்நிலையில், விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர நேற்று (10.03.2024) ஒமரகம கிராமத்தில் உள்ள குறித்த தொழிற்சாலைக்கு களவிஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன்படி ஒரு கிலோ காய்ந்த நீல சங்கு பூக்கள் 5,000 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், ஒரு கிலோ உலர் நீல சங்கு பூக்கள் தயாரிக்க 10 கிலோ பச்சை பூக்கள் தேவைப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்தப் பூக்களை உலர்த்துவதற்கான இயந்திரங்கள் மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை நிர்மாணிப்பதற்குத் தேவையான நிதியை விவசாய அமைச்சின் கீழ் உள்ள செயற்திட்டத்தின் மூலம் வழங்க முடியும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து போன்ற நாடுகளில் இரவு உணவிற்குப் பிறகு இந்த பூவை தேன் அல்லது சுண்ணாம்புச் சாறு சேர்த்து அருந்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும்,, கேக், ஜெல்லி, சாருவாட், பான் கேக் போன்ற உணவுகளுக்கு இயற்கையான நிறமூட்டியாக நீல சங்கு பூக்கள் பயன்படுத்தப்படுகிறது.