இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் அடிக்கடி சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபடுவதைக் கண்காணிப்பதற்காக “கடல் காவலர்கள்” எனப்படும் குடியியல் தன்னார்வப் படையை நிறுவுவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை கடற்றொழில் அமைச்சகம் சமர்ப்பித்துள்ளது.
வடமாகாண கடற்றொழிலாளர்களின் வலைகளை அழிப்பதற்காக இந்திய கடற்றொழிலாளர்கள் நாட்டுக் கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதைத் தடுப்பதற்காக, அமைச்சரவையின் ஒப்புதலுக்கு இந்த பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
காவலர்கள் திட்டம்
இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் வருவதைத் தடுப்பதற்கான கடற்படையின் தற்போதைய முயற்சிக்கு கண்காணித்து உதவுவதற்கே இந்த கடல் காவலர்கள் திட்டம் கொண்டு வரப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடமாகாண கடற்றொழிலாளர் சங்கங்கள் ஊடாக அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தன்னார்வப் படையில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்திய இழுவை படகுகள், தற்காலத்தில் இலங்கையின் கடல் எல்லைக்குள் அதிக எண்ணிக்கையிலும், பாரிய கடற்றொழில் படகுகளிலும் அடிக்கடி நுழைவது, உள்ளூர் கடற்றொழிலாளர்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது.
இலங்கை கடற்படை தகவல்
குறைந்தபட்சம் 500 இந்திய அடிமட்ட இழுவை படகுகள், இலங்கை கடல் எல்லைக்குள் நுழைகின்றன.
ஒவ்வொரு படகும் 1,000 கிலோ மீன்கள் மற்றும் இறால்களை பிடிக்கின்றன என்றும்அமைச்சரவை குறிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டவிரோத இழுவைப் படகு மூலம் இலங்கைக்கு நாளாந்தம் சுமார் 350 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.
வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களுக்கு சராசரியாக 900 இந்திய இழுவை படகுகள் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைகின்றன என்று அமைச்சரவை குறிப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த ஆண்டு இதுவரை மொத்தம் பதினாறு இந்திய வேட்டையாடும் இழுவை படகுகளுடன் 125 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.