ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்கோடியில் உள்ள தென்னாப்பிரிக்கா மூன்று தலைநகரங்களை கொண்டுள்ளது.
நிர்வாகம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் குறித்த மூன்று தலைநகரங்களும் பெயரிடப்பட்டுள்ளன.
இதன்படி, கேப் டவுன், பிரிட்டோரியா மற்றும் ப்ளூம்ஃபோன்டைன் ஆகிய நகரங்கள் தென்னாப்பிரிக்காவின் தலைநகரங்களாக பெயரிடப்பட்டுள்ளன.
தென்னாப்பிரிக்கா
பல தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்புகளால் தென்னாப்பிரிக்கா குறிக்கப்படுகிறது.
கடந்த 1910 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா ஒன்றுபட்ட நாடாக உருவாக்கப்படும் போது, அந்தந்த பகுதிகளில் வசித்த மக்கள் தத்தமது பகுதியையே தலைநகராக அறிவிக்க வேண்டும் என போராட்டம் நடந்தியுள்ளனர்.
குறித்த காலப்பகுதியில் தென்னாப்பிரிக்கா பரந்துபட்ட நாடாக காணப்பட்டமையும், அதன் ஒட்டுமொத்த பரப்பளவு 1.22 மி.ச.கி.மீ ஆக காணப்பட்டமையும் இதற்கு முதன்மையான காரணிகளாகும்.
மூன்று தலைநகரங்கள்
ஒவ்வொரு நடவடிக்கைக்கும் வெகு தொலைவில் உள்ள தலைநகருக்கு செல்லும் அவசியம் ஏற்பட்டதால் தான் தென்னாப்பிரிக்காவின் தலைநகரை மூன்றாக பிரித்து வைத்துள்ளனர்.
நாடாளுமன்றம் அமைந்துள்ள இடமாகவும் சட்டமன்ற தலைநகரமாகவும் கேப் டவுன் அமைந்துள்ளது.
இதையடுத்து, அதிபர் மற்றும் அமைச்சரவையின் இடமாகவும் நிர்வாக தலைநகரமாகவும் பிரிட்டோரியா விளங்குகின்றது.
அத்துடன், மேல்முறையீட்டு உச்ச நீதிமன்றத்தின் இடமாகவும் நீதித்துறையின் தலைநகரமாகவும் ப்ளூம்ஃபோன்டைன் திகழ்கிறது.