நாட்டில் உள்ள கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு இன்று பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாளை மறுதினமும்(31) இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மக்கள் இன்றையதினம் புனித வெள்ளி தினத்தை அனுஸ்டிப்பதுடன் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை ஈஸ்டர் தினத்தை கொண்டாடுகின்றனர்.
பலப்படுத்தப்படும் பாதுகாப்பு
இந்தநிலையில், இலங்கையில் உள்ள தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் பணிப்புரை விடுத்துள்ளார்.
பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அந்தந்த தேவாலய அருட்தந்தைகளுடன் கலந்தாலோசித்து பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பாதுகாப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, கடந்த 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று நாட்டில் உள்ள மூன்று தேவாலயங்கள் உள்ளிட்ட 8 இடங்களில் பயங்கரவாத குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னரான நாட்களில் இவ்வாறு தேவாலயங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.