2024 ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் இலங்கை அணியின் சகலதுறை வீரரான வனிந்து ஹசரங்க, பங்கேற்க மாட்டார் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இடது கணுக்காலில் ஏற்பட்டுள்ள உபாதை குணமடைவதற்கு ஓய்வு தேவைப்படுவதால் அவர் நடப்பு ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த அறிவிப்பை இலங்கை கிரிக்கெட், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு அறிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்னதாக வனிந்து ஹசரங்கவின் நிலைமையை சோதனை செய்த டுபாயில் உள்ள மருத்துவ நிபுணர் ஒருவர் முன்னெச்சரிக்கையாக ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
மாற்று வீரர்
சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியினால் ஏலத்தில் வாங்கப்பட்ட வனிந்து ஹசரங்க உபாதை காரணமாக இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் எந்தவொரு போட்டியிலும் விளையாடாமல் சிகிச்சை பெற்றுவந்திருந்தார்.
இந்த நிலையில், அவருக்கு பதிலாக மாற்று வீரர் ஒருவரை தெரிவுசெய்வதற்கு அணி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வருடம் 10.75 கோடி இந்திய ரூபாவுக்கு வனிந்து ஹசரங்கவை ஏலத்தில் வாங்கியிருந்த ரோயல் செலெஞ்சர்ஸ் அணி இந்த வருடம் அவரை விடுவித்திருந்தது.
இந்த நிலையில், இந்த ஆண்டு இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டிகளுக்காக அடிப்படை விலையான 1.5 கோடி இந்திய ரூபாவுக்கே அவரை சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி ஏலத்தில் வாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.