யாழ்ப்பாணம் சங்கானையில் போர்த்தேங்காய் ஏல விற்பனையில் போர்த்தேங்காய் ஒன்று நான்காயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள்
சங்கானை மாவடி இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் வருடந்தோறும் முன்னெடுக்கப்பட்டுவரும் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் நேற்றையதினம் (2024.04.23) சங்கானை மாவடி ஞானவைரவர் ஆலய முன்னறில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சிறுவர் முதல் பெரியோர்களுக்கான போர்தேங்காய் அடிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இதன்பின்னர் இடம்பெற்ற போர்த்தேங்காய் ஏல விற்பனையின் போது போர்த்தேங்காய் ஒன்று முதன்முறையாக நான்காயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை பெரும்பாலான போர்த்தேங்காய்கள் ஆயிரம் ரூபாவை கடந்த நிலையில் கடும் போட்டிக்கு மத்தியில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இன்றையகாலத்தில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் அழிந்துவரும் நிலையில் அதனை மீண்டும் இளம் சமூகத்தினரிடையே கொண்டுசேர்க்கும் முகமாக பல ஆண்டுகளாக சங்கானை மாவடி இந்து இளைஞர் மன்றத்தினர் இப் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.