எரிசக்தி துறைக்கான புதிய ஒழுங்குமுறை ஆணையத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், விமான எரிபொருள் எண்ணெய், திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு, மசகு எண்ணெய் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி, சுத்திகரிப்பு, விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவை தற்போதுள்ள சட்ட கட்டமைப்பிற்குள் இயங்கினாலும், அதற்கான விரிவான ஒழுங்குமுறை வழிமுறை எதுவும் இல்லை.
தனியார் நிறுவனங்கள் பலவும் பெட்ரோலிய உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற நிறுவனங்கள் பலவும் தொடர்புபடுவதால் இத்துறையில் ஏற்படுகின்ற சவால்களுக்கு தீர்வு காணல், உற்பத்திகளின் தரங்களை அதிகரித்தல் மற்றும் வாடிக்கையாளர்கள், முதலீட்டார்கள் மற்றுமு் ஏனைய தரப்பினர்களின் தேவைகளைப் பாதுகாப்பதற்காக சுயாதீன, ஆற்றல்மிக்க, பயனுள்ள மற்றும் வினைத்திறனான ஒழுங்குமுறைப்படுத்தல் பொறிமுறைக்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது.
அதனால், அது தொடர்பான விடயங்களை ஆராய்ந்து விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கும், சட்டங்களைத் தயாரிப்பதற்கும் வலுசக்தி, மின்சக்தி அமைச்சின் செயலாளரின் தலைமையிலான குழுவொன்றை நியமிப்பதற்காக வலுசக்தி, மின்சக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.