நடப்பு வங்கி கணக்குகள் மற்றும் சேமிப்புக் கணக்குகள் மூலம் இணையத்தில் பண பரிவர்த்தனை செய்பவர்களின் கணக்குகளில் இருந்து பணம் எடுக்கும் மோசடியானது சுமார் ஒரு வார காலமாக இயங்கி வருவதாக பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற (26) நாடாளுமன்ற அமரிவில் கலந்துக்கொண்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இணைய பண பரிவர்த்தனை மோசடி மூலம் கணக்கு வைத்திருப்பவர்களுக்குத் தெரியாமல் வேறு கணக்குகளுக்கு பணம் மாற்றப்படுகின்றது. பணத்தைப் பெறுவதற்கான சிறிய தொகையைக் கூட பெறாத வகையில் இந்த மோசடி செய்யப்படுகின்றது.
இணைய பண பரிவர்த்தனை மூலம் மோசடி
பலாங்கொடையில் ஒருவரின் கணக்கிலிருந்து பதினோரு இலட்சம் வேறு கணக்கிற்கு மாற்றப்பட்டமை தொடர்பில் நேற்று 25 ஆம் திகதி கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் அவர் வங்கிக்குச் சென்று சோதனையிட்டபோது, இணையவழியில் அமைப்பொன்றினால் பணம் களவாடப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு இடங்களில் இணைய பண பரிவர்த்தனைகள் மூலம் மோசடி இடம்பெறுகின்றது.
ஒரே நாளில் சுமார் ஐம்பது, அறுபது கணக்குகளுக்கு பணப் பரிமாற்றம் செய்து பெரும் மோசடி நடப்பதாகவும் இரண்டு மூன்று நாட்களில் சுமார் ஆயிரம் பேரின் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
எனவே இவ்வாறான மோசடி தொடர்பில் மத்திய வங்கிக்கும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிற்கும் அறிவிக்குமாறு நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.