கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடமையில் இருந்த இலங்கை விமானப்படை வீரரின் துப்பாக்கி வெடித்ததில் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விமான நிலையத்தின் விசேட பிரமுகர்கள் பயன்படுத்தும் முனையத்தில் இன்றையதினம் (30-04-2024) காலை கடமையில் ஈடுபட்டிருந்த விமானப்படை வீரர் ஒருவரின் துப்பாக்கி வெடித்ததில் முனையத்தின் கூரை சேதமடைந்துள்ளது.
இலங்கை விமானப்படையின் தலைமை விமானப்படையைச் சேர்ந்தவரிடம் இருந்த T-56 ரக துப்பாக்கி தவறுதலாக காலை 10.30 மணியளவில் வெடித்துள்ளது.
இருப்பினும், இதனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை கடமையில் இருந்த குறித்த விமானப்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மற்றும் இலங்கை விமானப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில், பணம் செலுத்தி வசதிகளைப் பெறும் சிறப்பு விசேட விருந்தினர்கள் மற்றும் உலகின் முன்னணி வர்த்தகர்கள் இந்த முனையத்தின் ஊடாக அடிக்கடி பயணங்களை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.