உலக ஊடக சுதந்திர தினமானது ஒவ்வொரு வருடமும் மே மாதம் 3ஆம் திகதி கடைபிடிக்கப்படுகிறது.
1991ஆம் ஆண்டு யுனெஸ்கோ (UNESCO) அமைப்பின் 26ஆவது பொதுக் கூட்டத்தில் சிபாரிசு செய்யப்பட்ட “உலகின் சகல பிராந்தியங்களுக்குமான பேச்சு மற்றும் கருத்து வெளியீட்டு சுதந்திரத்துக்கானதும், ஊடக சுதந்திரத்தினதும் பாதுகாப்புக்கும் மேம்படுத்தலுக்குமான ஆணை” என்ற தொனிப் பொருளில் பரிந்துரைக்கப்பட்ட கட்டளையின் நிமித்தமாக இத்தினம் உருவானது.
வைன்ட்ஹோக் பிரகடனம் (Windhoek Declaration) என்று அழைக்கப்படும் இந்த பிரகடனம் 1991ஆம் ஆண்டில் நடந்த யுனெஸ்கோ அமைப்பினால் நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தின் 26ஆம் அமர்விலும் அங்கீகரிக்கப்பட்டது.
1993ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய, ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் 3ஆம் திகதி “சர்வதேச பத்திரிகை சுதந்திர தினமாக” பிரகடனப்படுத்தப்பட்டது.
கொலம்பிய பத்திரிகையாளர் கிலெர்மோ கானோ இசாசா என்பவர் 1986ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் திகதி அவரது அலுவலகம் முன்பாக வைத்து படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
அவரது படுகொலையின் பின்னரே பத்திரிகை சுதந்திரம் தொடர்பான பேச்சு உலகம் முழுவதும் வலுப்பெற்றது. இவரின் நினைவாக இந்நாளில் ஊடக சுதந்திரத்துக்காக பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு ஆண்டுதோறும் யுனெஸ்கோ நிறுவனத்தினர் யுனெஸ்கோ/கிலெர்மோ கானோ உலக ஊடக சுதந்திர விருது வழங்கி கௌரவிக்கின்றனர்.
இந்த வருடம் 31வது உலக ஊடக சுதந்திர தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த வருடத்துக்கான இந்த தினத்தின் கருப்பொருளாக அமைவது “கிரகத்துக்கான ஒரு பத்திரிகை : உலக சுற்றுச்சூழல் நெருக்கடிகளின் மத்தியில் ஊடகவியல் துறை” என்பதாகும்.