யாழில் உள்ள ஒஸ்மானியா கல்லூரிக்கு அருகாமையில் நீண்ட காலமாக இயங்கிவந்த சட்டவிரோத கொல்களம் ஒன்று இன்று (04) பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த பகுதிக்குச் சென்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் நிஷாந்த தலைமையிலான பொலிஸ் குழுவினர் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் சுற்றிவளைப்பினை முன்னெடுத்துள்ளனர்.
அப்போது, ஒருவர் மாடுகளை வெட்டி இறைச்சியாக்கிக்கொண்டிருந்தமையை அவதானித்துள்ளனர். உடனடியாக அவரை கைது செய்த பொலிஸார், 150 கிலோ இறைச்சியை கைப்பற்றியுள்ளனர்.
மேலும், அங்கிருந்த 21 மாடுகள் உயிருடன் மீட்கப்பட்டதுடன் 4 பெரிய ஆடுகள், இரண்டு குட்டி ஆடுகளும் மீட்கப்பட்டன. இவை திருடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதேவேளை, சந்தேக நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், நாள் ஒன்றுக்கு 6 மாடுகள் வெட்டப்படுவதாக தெரியவந்துள்ளது.
மேலும், அங்கு மாடுகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வைக்காமல், பட்டினியில் இருந்ததால் மீட்கப்பட்ட மாடுகளுக்கு பொலிஸார் தண்ணீர் வைத்து மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.