ஐ.பி.எல்.(IPL)தொடரில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்(Ravichandran Ashwin) சேப்பாக்கம் மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
நேற்றையதினம் (12) ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னையில் தனது கடைசி லீக் போட்டியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி(Chennai Super Kings) விளையாடியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ்(Rajasthan Royals) அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
சென்னை அணி
அதற்கமைய களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 141 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தரப்பில் சிமர்ஜீத் சிங்(Simarjeet Singh) 3 விக்கெட்டுகளும், தேஷ்பாண்டே (Tushar Deshpande)2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதனை தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி 18.2 ஓவரில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 145 ஓட்டங்களை பெற்று வெற்றிப்பெற்றது.
தமிழக வீரர்
ராஜஸ்தான் சார்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், பர்கர் மற்றும் சஹல்(Yuzvendra Chahal) தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
சேப்பாக்கம் மைதானத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை 49 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த நிலையில் இந்த போட்டியின் மூலம் 50 விக்கெட்டுக்களை வீழ்த்தி சேப்பாக்கம் மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
மேலும், சேப்பாக்கத்தில் சென்னை அணியின் 50 ஆவது வெற்றியை கொண்டாடும் வகையில், சென்னை வீரர்களுக்கு சிறப்பு பதக்கம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சேப்பாக்கம்(Chepauk )மைதானத்திற்கு வந்திருந்த சென்னை ரசிகர்களுக்கு சி.எஸ்.கே. (CSK)சார்பில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஒரு மைதானத்தில் அதிக ஐபிஎல் விக்கெட்டுகள்
70 – சுனில் நரைன்(Sunil Narine) (கொல்கத்தா) 68 – லசித் மலிங்கா(Lasith Malinga) (மும்பை WS) 58 – அமித் மிஸ்ரா(Amit Mishra )(டெல்லி) 52 – யுஸ்வேந்திர சஹல் (பெங்களூரு) 52 – ஜஸ்பிரித் பும்ரா(Jasprit Bumrah) (மும்பை WS) 50 – ரவிச்சந்திரன் அஸ்வின் (சென்னை)