தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதிகளில் ஒருவரான எழிலன் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோரின் மகள் நல்விழி , இலங்கை உச்சநீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்த எழிலன் எனப்படும் சசிதரன் மிகவும் பிரபலமானவர். இவர் , மாவிலாறு அணையை மூடி இறுதிக் கட்டப் போருக்கு வழி வகுத்தவர் என இராணுவ வட்டாரங்களில் குறிப்பிடப்படுகின்றார்.
இராணுவத்திடம் சரணடைந்த எழிலன்
இறுதிக் கட்டப் போரின் போது அவர் இராணுவத்திடம் சரணடைந்ததாக எழிலன் மனைவி அனந்தி சசிதரன் தெரிவித்திருந்த போதும், இராணுவம் அதனை மறுத்திருந்தது.
எனினும் எழிலன் தொடர்பில் அதன் பின்னர் எதுவித தகவல்களும் வெளியாகவில்லை. அதன்பின்னர் காலங்களில் எழிலன் மனைவி அனந்தி, வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு மாகாண சபை உறுப்பினராக பதவி வகித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது எழிலனின் மகள் நல்விழி LLB(Hons) in Law பட்டம் பெற்றுக் கொண்டுள்ளதுடன், உச்சநீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.