மே மாதம் 1 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை 46,042 சர்வதேச சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
தற்போது பருவ காலம் நிறைவடைந்தமையினால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவடைந்துள்ளது.
பிரித்தானியா மற்றும் ரஷ்யா பயணிகள் வருகை சரிவு
கடந்த ஜனவரி 1 ஆம் திகதி முதல் மே 12 ஆம் திகதி வரையில் மொத்தமாக 830, 693 சுற்றுலாப் பயணிகளே நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
அதன்படி, முதல் இரண்டு மாதங்களில் நாளாந்தம் நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 5,000க்கு மேல் காணப்பட்ட நிலையில், தற்போது சராசரியாக 3,800 ஆக குறைந்துள்ளது.
இதேவேளை, வாராந்த நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் 26,000 ஆகக் குறைந்துள்ளது. நாட்டிற்கு அதிக சுற்றுலா பயணிகள் வருகை தரும் நாடுகளின் பட்டடியலிலும் மே மாதம் மாற்றம் காணப்பட்டுள்ளது.
பட்டியலில் ஒரு மாதத்தில் 23 சதவீதமான சுற்றுலா பயணிகள் வருகையுடன் இந்தியா முதலிடத்திலுள்ளது. 11 சதவீதமான சுற்றுலா பயணிகள் வருகையுடன் மாலைத்தீவு இரண்டாம் இடத்திலும், 7 சதவீதமானவர்களின் வருகையுடன் சீனா மூன்றாம் இடத்திலும் உள்ளது.
இதேவேளை, அதிகளவு சுற்றுலா பயணிகளின் வருகையை கொண்ட பிரித்தானியா மற்றும் ரஷ்யா நான்காவது ஐந்தாவது இடங்களுக்கு சரிந்துள்ளன.