ஈரானில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 9 பேரின் இறுதி சடங்கு தலைநகர் டெஹ்ரானில் நேற்று நடப்பெற்றது.
டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டிருந்த உடல்களுக்கு ஈரானின் உச்ச அதிகாரம் படைத்த மூத்த மத தலைவர் அயதுல்லா அலி கமேனி மத சடங்குகளை செய்தார்.
உடல்கள் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டிகள் மீது ஈரான் கொடி போர்த்தப்பட்டிருந்தது. மேலும் ஒவ்வொரு சவப்பெட்டியிலும் உயிரிழந்தவர்களின் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தது.
மத சடங்குகள் முடிந்ததும் சவப்பெட்டிகள் வாகனத்தில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன.
இந்த இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அலைகடலென திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
சவப்பெட்டிகள் ஏற்றப்பட்ட வாகனம் மக்கள் வெள்ளத்தில் மெல்ல, மெல்ல ஊர்ந்து சென்றது. இந்த ஊர்வலம் டெஹ்ரானின் டவுன்டவுன் வழியாக ஆசாதி சதுக்கத்தை சென்றடைந்தது.
அங்கு நடந்த இறுதி சடங்கில் வெளிநாட்டு தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு இப்ராஹிம் ரைசி உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்தினர்.