க.பொ.த (உயர்தர) தகவல் தொழிநுட்பத்தை ஒரு பாடமாக கற்கும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதி ஊடக பிரிவு (President Media Division | PMD) அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்தவகையில் இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (Telecommunications Regulatory Commission of Sri Lanka) மற்றும் ஜனாதிபதி நிதியம் இணைந்து வழங்கும் புலமைப்பரிசில் வேலைத்திட்டம் – 2024/2025 இற்காக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் முடிவுத்திகதி ஜூன் மாதம் 07 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடக பிரிவு
இந்தப் புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் மிக விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதால் தகுதி பெற்றுள்ள மாணவ மாணவிகள் தமது விண்ணப்பங்களை உரிய முறையில் நிரப்பி குறித்த திகதிக்கு முன்னர் தமது பிரதேச கிராம உத்தியோகத்தர் மற்றும் செயலாளரின் பரிந்துரையுடன், வகுப்பாசிரியர், பாடசாலை அதிபர், மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளரின் பரிந்துரையு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அதன்படி செயலாளர், ஜனாதிபதி நிதியம், இலக்கம் 35, மூன்றாம் மாடி, லேக்ஹவுஸ் கட்டிடம், டீ. ஆர் விஜேவர்தன மாவத்தை, கொழும்பு 10 என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் மாத்திரம் அனுப்பிவைக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கடித உரையின் இடது பக்க மேல் மூலையில் புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தின் பெயர் மற்றும் பாடசாலை உள்வாங்கப்பட்டுள்ள கல்வி வலயத்தின் பெயரையும் குறிப்பிட வேண்டும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
மோசமான காலநிலை
இந்த புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் தினம் மே மாதம் 22 ஆம் திகதி முடிவடைந்துள்ள போதிலும், கடந்த சில நாட்களில் நிலவிய பல்வேறு நிர்வாகச் சிக்கல்கள் மற்றும் மோசமான காலநிலை காரணமாக விண்ணப்பங்களை அனுப்ப முடியாத மாணவர்கள் அதிகமானோரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தத் திகதி நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.