யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மோட்டார் சைக்கிளுடன் உள்நுழைந்த இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் காயமேற்பட்ட ஒருவரை ஏற்றிக்கொண்டு மோட்டார் சைக்கிளை செலுத்தியவாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்குள் ஒருவர் நுழைந்துள்ளார்.
சந்தேகநபர், வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த ஒருவருடனே இவ்வாறு உந்துருளியில் சென்றுள்ளதுடன் அவருக்கு சிகிச்சையளிக்குமாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில், வைத்தியசாலை ஊழியர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வருகை தந்தவரிடம் கேள்வி எழுப்பியபோது, குறித்த நபர் அவரை மேசை மீதிருந்த அச்சு இயந்திரத்தால் தாக்குவது கண்காணிப்பு கமராவில் பதிவாகியிருந்தது.
இதன்போது, காயமடைந்த வைத்தியசாலை ஊழியர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். வைத்தியசாலைக்குள் அத்துமீறி மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் மதுபோதையில் இருந்தததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவசர கடிதம்
அந்நபர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டடுள்ளார். இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரையும் ஜூன் மாதம் 11 ம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இருப்பினும் வாள் வெட்டுக்கு இலக்காகி மோட்டார் சைக்கிளில் வந்த காயமடைந்தவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்ககோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வைத்தியசாலை பணிப்பாளருக்கும் வட மாகாண ஆளுநருக்கும் அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோருக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் பின்வரும் நான்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
1.உடனடியாக சம்பவம் தொடர்பான உள்ளக விசாரணை ஆரம்பிக்கப்பட்டு பாதுகாப்பு பொறிமுறையில் உள்ள தவறுகள் கண்டறியப்பட்டு உடனடியாக திருத்தப்பட வேண்டும்.
2. கடமையில் உள்ள வைத்தியசாலை ஊழியர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
3 . வைத்தியசாலைக்கு வருகின்ற அப்பாவி நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
4. சம்பந்தப்பட்ட நபர் ஆகக்கூடிய சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படவேண்டும். இது தொடர்பாக தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படாதவிடத்து வைத்தியசாலையில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து தொடர் தொழிற்சங்க போராட்டத்திற்கு செல்ல வேண்டி ஏற்படலாம் – தெரிவிக்கப்பட்டுள்ளது.