புதிய இணைப்பு
மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலிங்கில் நடைபெற்ற தொடருந்து விபத்தின் பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதோடு காயமடைந்தோர் எண்ணிக்கை 60ஆக அதிகரித்துள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், விபத்து தொடர்பாக இந்திய ஜனாதிபதி தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
மீட்பு பணிகள்
“மேற்கு வங்காள மாநிலத்தின் டார்ஜிலிங்கில் அரங்கேறிய ரெயில் விபத்து சம்பவம் வேதனை அடைய செய்கிறது. எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாருடனேயே உள்ளது.
காயமுற்றவர்கள் விரைந்து குணமடையவும், மீட்பு பணிகள் விரைந்து நடைபெறவும் விழைகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மேற்கு வங்க தொடருந்து விபத்து தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில்,
“மேற்கு வங்க விபத்து சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமுற்றவர்கள் விரைந்து குணமடைய வேண்டுகிறேன்.
அதிகாரிகளுடன் பேசி, கள நிலவரம் குறித்து கேட்டறிந்தேன். மீட்பு பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.
விபத்து பகுதிக்கு துறை சார் அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் வந்து கொண்டிருக்கிறார். விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து 2 இலட்சமும், காயமுற்றவர்களுக்கு 50 ஆயிர்மும் வழங்கப்படும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
இந்தியாவின் – மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டார்ஜிலிங் தொடரந்து நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடுகதி தொடருந்துடன் எதிரே வந்த தபால் தொடருந்து ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் விபத்தில் 8 பேர் பலியாகியதோடு, 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
3 பெட்டிகள் சேதம்
குறித்த விபத்தானது, இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது நிறுத்திவைக்கப்பட்டிருந்த தொடருந்தின் பின் பகுதியில் இருந்த 3 பெட்டிகள் தடம்புரண்டு சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
விபத்தின் இடிபாடுகளில் பலரும் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
தற்போது சம்பவ இடத்தில் பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.