பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு அண்மையில் தொழிலாளர் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தோட்டக் நிறுவனங்கள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் பரிசீலித்துள்ளது.
அகரபதன பெருந்தோட்ட நிறுவனம் உட்பட 21 நிறுவனங்களினால் மேன்முறையீட்டு மனுவில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த மனுக்கள் காமினி அமரசேகர, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் நேற்று (28) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மீள் பரிசீலனை
அதனை தொடர்ந்து, நீதிபதி சார்பில் பரீசீலனைகள் நடத்தப்பட்டு, பின்னர் மேலதிக விடயங்கள் மீதான பரிசீலனை எதிர்வரும் 4ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரினால் வெளியிடப்பட்டது.
தீர்ப்பு
வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் எழுத்தாணை மனுவொன்றை தாக்கல் செய்திருந்த நிலையில், குறித்த வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்தி இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தத் தீர்ப்பு சட்டவிரோதமானது என்று தீர்ப்பளிக்கக் கோரி தோட்ட நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.