மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் (R. Sampanthan) பூதவுடல் கொழும்பிலுள்ள ஏ.எப்.ரேமன்ட் மலர்சாலையில் இன்று காலை 9 மணியிலிருந்து மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
நாளை புதன்கிழமை அன்னாரின் பூதவுடல் நாடாளுமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து அவரின் சொந்த இடமான திருகோணமலைக்கு (Trincomalee) எடுத்துச் செல்லப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை தமிழரசு கட்சியின் (Ilankai Tamil Arasu Kachchi) மூத்த பெரும் தலைவர்களில் ஒருவரான இரா.சம்பந்தன் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் கொழும்பிலுள்ள (colombo) தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
நாடாளுமன்ற வெற்றிடம்
இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் (R. Sampandan) காலமானதையடுத்து நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சண்முகம் குகதாசன் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பந்தனை அடுத்து அதிக வாக்குகளை பெற்ற அடிப்படையில் சண்முகம் குகதாசன், நாடாளுமன்றுக்கு பிரவேசிக்கவுள்ளார்.
இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இலங்கை தமிழரசுக் கட்சி தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும், மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் மறைவுக்கு மூத்த அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.